பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை

இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன

ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
 இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.
பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
1. பிதா - தகப்பனார்
2. பிதாமஹர் - பாட்டனார்
3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4. மாதா - தாயார்
5. பிதாமஹி - பாட்டி
6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.